×

மெரினா கடற்கரையில் அதிக கலர் பூசப்பட்ட சிக்கன் பினாயில் ஊற்றி அழிப்பு: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வால் பரபரப்பு

சென்னை: மெரினா கடற்கரையில் அதிக கலர் பூசப்பட்ட சிக்கனை பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை உணவு விடுதிகளில் விற்பனை செய்ய கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.அதோடு சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ் கிரீம், டீ கடை, சிக்கன் கடை, பிரைட் ரைஸ் கடை என 900க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் இந்த கடைகளில் உணவு பொருட்களை வாங்கி குடும்பத்துடன் உட்கொள்கின்றனர். இங்கு விற்கப்படும் உணவு பொருட்களில் ரசாயன கலப்படம், கலர் பவுடர் போன்று உடல்நிலையை பாதிக்கும் பொருட்கள் கலந்து விற்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரு டீ கடையில் டீ தூள்களில் கலர் வருவதற்காக கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர். பின்னர் பிரைடு ரைஸ் கடையில் ஆய்வு செய்த போது சிக்கனில் அதிக சிவப்பு கலர் பவுடர் கலந்து ஊற வைத்திருந்தனர். அதிகாரிகள் அந்த சிக்கனை பினாயில் ஊற்றி அழித்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மெரினா கடற்கரையில் அதிக கலர் பூசப்பட்ட சிக்கன் பினாயில் ஊற்றி அழிப்பு: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Marina beach ,CHENNAI ,Karnataka ,Food safety ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்